தீபாவளி என்பது தீபங்களை வரிசையாக ஏற்றிவைத்து வணங்குதல் தீபாவளி என்பார்கள். தீபம் என்றால் வெளிச்சம், ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சிறு இருட்டு (தீய எண்ணங்கள்) இருக்கும். அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற இந்த தீய எண்ணங்களை தூக்கி எறிந்து அங்கு நல்ல எண்ணங்கள் என்ற ஒளியை ஏற்றவேண்டுமென்பதே தீபாவளியின் நோக்கம்.
நரகாசுரனின் உண்மையானப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து அசுரர்களை அழிக்கச் சென்றபோது, பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. தனக்கு மரணம் ஏற்படவேண்டுமென்றால் அது தன் தாயால் மட்டுமே ஏற்படவேண்டும் என்று வரம் பெற்றிருந்தான். தாய் ஒருநாளும் தன் மகனைக் கொல்லமாட்டாள் என்பது அவன் எண்ணம். பெற்ற மகன் என்றும் பாராமல், பாவச்செயல்கள் புரிந்த நரகாசுரனை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்யபாமா மூலம் வதம் செய்தார். அப்போது அவன் மரண
சமயத்தில் கேட்ட வரத்தால் ஏற்பட்டதுதான் இந்த தீபாவளித் திருநாள் என்று கூறப்பட்டாலும், புராணங்கள் அதற்கு முன்னரே தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டதாகக் கூறுகின்றன.
இந்நாளில்தான் மகாலக்ஷ்மியை மகாவிஷ்ணு திருமணம் புரிந்த கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது. ஸ்ரீ இராமர், இராவணனைப் போரில் வென்று அயோத்தி வந்தடைந்த போது மக்கள் அதனைக் கொண்டாடி மகிழ்ந்த நாள் தீபாவளித் தினம் என்றும் கூறப்படுவதுண்டு. மகாபலிச் சக்கரவர்த்தி முடிசூடிய தினம் இதுவெனவும், விக்கிரமாதித்த மன்னர் முடிசூடிய நாள் இதுவெனவும் கூறப்படுகிறது.
மகாலஷ்மி விவாஹம் முடிந்ததும் லஷ்மி நாராயணரைத் தேவர்கள் ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஆசிபெற்றனர். அப்போது யமதர்மனும் நமஸ்கரித்து ஆசிபெற்றான். அப்போது மகாலஷ்மி, யமதர்மனிடம் ""இன்றைய தினம் தீபாவளிப்பண்டிகையை முறைப்படி கடைபிடிப்பவர்களது இல்லத்தில், நீ என் அனுமதி இன்றி உயிர்களைக் கவர்ந்து செல்லக்கூடாது'' என்று கேட்டுக் கொண்டாள்.
தர்மராஜனும் மகாலஷ்மியின் வேண்டுகோள்படி நடப்பதாக வாக்களித்தான். இதனால் மகிழ்ந்த மகாலஷ்மி, யமதர்மனிடம் இன்று உன்னையும் மனிதர்கள் ஆசாரத்துடன் சோபனாஅட்சதைகளால் பதினான்கு தர்ப்பணங்கள் செய்து திருப்தி செய்விக்கட்டும் என்று வரம் அளித்தாள். இதனாலேயே இந்த தினத்தில் யமதர்ப்பணம் செய்யப்படுகிறது.
மேலும் தீபாவளியன்று நரகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்யச் சென்ற போது அரக்கர்கள் மகாலஷ்மியைக் கவர்ந்து செல்ல முயற்சித்தனர். உடனே மகாலஷ்மி சூக்ஷ்மரூபம் கொண்டு எண்ணெயில் எரிந்துகொண்டு இருந்த தீபத்தில் மறைந்து விட்டாள். நரகாசுரனை சம்ஹாரம் செய்து திரும்பிய கிருஷ்ணர் அரக்கர்களைக் கொன்ற பின், மீண்டும் மகாலக்ஷ்மி தீபத்தினின்றும் தோன்றினாள் என்று விஷ்ணு புராணம் கூறுகிறது. இதனால் தான் அன்று தீபத்தையும், தைலத்தையும் லக்ஷ்மி ஸ்வரூபமாகக் கொண்டாடுகிறோம்.
அன்று எல்லா தேவதைகளும் பண்டிகைப் பொருட்களில் வாசம் செய்வர். எண்ணெயில் லட்சுமி, அரப்புத் தூளில் கலைவாணி, சந்தனத்தில் பூமாதேவி, குங்குமத்தில் கெüரி, மலரில் மோகினி, தண்ணீரில் கங்கை, புத்தாடையில் விஷ்ணு, பட்சணத்தில் அமிர்தம், தீபத்தில் பரமாத்மா ஆகியோர் உறைகின்றனர்.
தீபாவளியன்று அதிகாலையில் துயிலெழுந்து, தெய்வத்தின் முன் தீபம் ஏற்றி தைலம், லேகியம், புத்தாடைகள், ஆபரணங்கள் முதலியவற்றை பகவானின் படத்தின் முன் வைக்க வேண்டும். பின்னர், எண்ணெய்த் தேய்த்துக் கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். அதற்கு முன் வெந்நீர் உள்ள பாத்திரத்தை ஒரு பலகையில் வைத்து புஷ்பங்களைச் சமர்ப்பித்து கைகளைக் கூப்பியபடி
கீழ்க்கண்ட சுலோகத்தைக் கூற வேண்டும்.
விஷ்ணோ: பாத ப்ரஸþதாஸி வைஷ்ணவீ விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ் தஸ்மாத் ஆஜன்ம மரணாந்திகாத்
திஸ்ர: கோட்யோர்த்த கோடீச தீர்த்தானாம் வாயுரப்ரவீத்
திவி புவ்யந்தரிúக்ஷ ச தானிமே ஸந்து ஜாஹ்னவி
என்று பிரார்த்திக்க வேண்டும்.
"கங்காதேவி! நீ விஷ்ணுவின் பாதத்தில் தோன்றியதால் வைஷ்ணவியாகவும், விஷ்ணுவை அதி தேவதையாக உடையவளாகவும் இருக்கிறாய். பிறப்பு முதல் இறுதி வரை பாவங்களிலிருந்து எங்களைக்
காத்தருள வேண்டும். தேவலோகம், பூமி, பாதாளம் ஆகிய எல்லாவற்றிலுமுள்ள மூன்றரைக் கோடி புண்ய தீர்த்தங்களும் தங்கள் கருணையால் எனக்காக இங்கு வந்து அருளவேண்டும்' என்பதே இதன் பொருளாகும்.
மேற்கண்டவாறு பிரார்த்தித்து ஸ்நானம் செய்த பிறகு புத்தாடைகள், ஆபரணங்கள் பூண்டு இறைவனைப் பிரார்த்தித்து இனிப்புகள், பழங்கள், தாம்பூலம் முதலியவற்றை நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி, பகவானையும், பெரியோர்களையும் நமஸ்கரித்து, தீபங்களால் எங்கும் ஒளிரச் செய்ய வேண்டும்.
இத்தீபாவளியை வட இந்தியாவில் மஹாபலி தீபம், நரக சதுர்த்தசி, லக்ஷ்மி குபேர பூஜை என்று மூன்று தினங்கள் கொண்டாடுகிறார்கள். இத் திருநாளில் மகாலஷ்மிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டங்கள் நிவேதனம் செய்து எல்லோருக்கும் கொடுப்பார். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; கன்னிப்பெண்களுக்குத் திருமணம் விரைவில் நடைபெறும்.
யமதீபம்: தீபாவளியின் முதல் நாள் இரவு யமதீபம் ஏற்ற வேண்டும். ஓர் ஆழாக்கு எண்ணெய் பிடிக்கும் அளவு பெரிய அகலில் ஏற்ற வேண்டும். நம் வீட்டு மொட்டைமாடி அல்லது மேற்கூரையில் எவ்வளவு உயரம் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் யமதீபத்தை தெற்கு நோக்கி வைக்க வேண்டும். இதனால் யமபயம் நீங்கும்.
சூரியனின் பிள்ளை யமன், பெண் யமுனா. இருவரும் பாசப்பிணைப்புடன் உள்ளவர்கள். ஒருசமயம், யமுனா தன் சகோதரன் யமனை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தாள். சகோதரியைக் காண வந்த யமன் ஏகப்பட்ட துணிமணிகள், நகைகள், பட்சணங்களை சீர்வரிசையாகக் கொண்டு வந்து கொடுத்தான். யமுனா தன் அண்ணனுக்கு தன் கையாலே பலவித பட்சணம் தயாரித்து சாப்பிட வைத்தாள்.
இதனால் மனம் மகிழ்ந்த யமன் தங்கையை "தீர்க்க சுமங்கலி பவ' என வாழ்த்தினான். இதனால் தன் சகோதரனால் தன் கணவனுக்கு ஆபத்தில்லை என்று ஆனந்தப்பட்டாள். இப்படி பாசமுடன் பழகும் உடன்பிறப்புகளுக்கு யமபயம் இருக்காது. அது முதல் சகோதரிகளுக்கு தீபாவளி பணம் கொடுக்கும் பழக்கம் உருவானது. இந்த நந்நாளில் சகோதரனை சந்தோஷப்படுத்தும் சகோதரிகள் எப்போதும் சுமங்கலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை!
தீபாவளி நந்நாளில் லக்ஷ்மி குபேர பூஜை மற்றும் கேதார கவுரி விரத பூஜை செய்து பெரியோர்களின் ஆசியைப் பெற்று, சகல நலன்களும் மகிழ்ச்சியான வளமான வாழ்வும் பெறுவோம்.
- பாலசுப்ரமணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.